யார் பக்கம் செல்வது? காத்திருக்கும் பன்னீர்செல்வம்

யார் பக்கம் செல்வது? காத்திருக்கும் பன்னீர்செல்வம் June 7, 2021 7:00 amPublished by Twenty4 Chennai அதிமுகவை கைப்பற்ற சசிகலா தாக்குதலை தொடங்கியிருக்கும் நேரத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் மதிப்பு கூடத்தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாத பன்னீர்செல்வம், வரும் நாட்களில் எந்த பாதையில் செல்வது என முடிவெடுக்க நீண்ட யோசனையில் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. எனினும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றி முதல் ரவுண்டில் பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டினார். ஆனாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தை அவ்வளவு எளிதாக தோற்கடித்துவிட முடியாது என்பதை எடப்பாடி உணர்ந்தே உள்ளார். எனவே தற்போது அமைதியாக காய் நகர்த்துவதே உசிதம் என அவர் எண்ணுகிறார். ஆனால் சசிகலாவின் அதிமுகவை கைப்பற்றும் மறுமுயற்சிகள் எடப்பாடியை டென்ஷனுக்கு உள்ளாக்கியுள்ளது. அரசியலில் ஜூனியரான எடப்பாடி பழனிசாமி தன்னை இவ்வளவு எளிதாக ஓரம்கட்டுவார் என பன்னீர்செல்வம் முதலில் எண்ணவில்லை. கடைசி சுற்றுகளில் ஜெயித்து விடலாம் என்பதே அவரின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பன்னீரின் இந்த நம்பிக்கை பொய்க்கத்தொடங்கியது. நடந்து முடிந்த தேர்தலில் பன்னீர்செல்வம் ஜெயிப்பதே பெரும்பாடாகிவிட்டது. தென்தமிழகத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வெற்றி கண்டு பெரும்பான்மையான எம்எல்ஏகள் எடப்பாடியின் விசுவாசிகளாக உள்ளார்கள். இது தற்செயலாக நடந்தது என பன்னீர் அணி நம்ப தயாராக இல்லை. எடப்பாடியின் ஆதிக்கத்தை தகர்க்க சசிகலா பக்கம் சாய்வது தனக்கு உதவும் என பன்னீர்செல்வம் எண்ணுகிறார். அதேவேளையில் இதையே தனது இறுதி தெரிவாகவும் அவர் வைக்க விரும்பவில்லை. புதுடெல்லி உடனான தனது விசுவாசத்தை காட்டி தனது மகனுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் வாங்கிவிட்டால் கட்சியில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது. மத்தியில் செல்வாக்கு இழந்துவரும் பாஜக தனது ஆதரவை தக்கவைத்துக்கொள்ள புதிய கூட்டணி கட்சிகளை குறிவைக்கிறது. எனினும் ஜெகன்மோகன் ரெட்டியை தவிர பாஜகவுடன் கூட்டணி வைக்க புதிதாக வேறு கட்சிகள் தற்போது தயாராக இருப்பதாக தெரியவில்லை. கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக துணையுடன் பாஜக நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. எனவே அதிமுகவை மத்திய மந்திரி சபையில் சேர்ப்பதன் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை பெறலாம் என அந்த கட்சி திட்டமிடுகிறது. சசிகலாவை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு நிலை தான் திமுகவை எதிர்க்க உதவும் என நம்புகிறார். 2024-யில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கணிசமான சீட்டுகளை ஜெயித்தால் நடுவண் அரசில் முக்கிய பங்கு வகிக்கலாம் என அவர் கருதுகிறார். சசிகலாவுக்கு தற்போது அதிமுகவை கைப்பற்ற பன்னீரின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் பன்னீர் தனது முன்னாள் எசமானிக்கு அவ்வளவு எளிதாக சிவப்பு கம்பளம் விரிப்பாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியே. ராஜா வாஸ்

Comments